கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று (ஆக.,18) வயது மூப்பு காரணமாக காலமானார்.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி இன்று காலமானார். தனது தாயார் மறைந்த தகவலை தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் பதிவிட்டதாவது: என்னை பார்த்து, பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார். அவரின் இறுதி ஆசைப்படி சென்னை சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.