கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பனை – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரம்பலூர் அருகே சுதந்திரத் தினத்தன்றும் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது.

 கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கோ விற்பதற்கோ தடை இருக்கும் நிலையில் அதை மீறி செயல்பட்டால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவிக்க 10581 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் கள்ளச்சாராய விற்பனை எவ்வித தங்கு தடையின்றி நடபெற்று வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி, நேற்று அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஊரின் மத்தியில் குடுயிருப்பு பகுதியின் நடுவே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றது.

அங்குள்ள சிவன் கோயில் வளாகத்தில் வைத்து கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பதுடன் அதனை வாங்குபவர்கள் குடியிருப்புப் பகுதிகளிலேயே குடித்துவிட்டுச் செல்கின்றனர். இதனால் அக்கம் பக்கம் குடியிருப்போர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

 150 மில்லி அளவு கொண்ட பாக்கெட் 50 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுவதுடன் 10 பாக்கெட்டுகள் வாங்கினால் 1 பாக்கெட் இலவசம் என்ற சலுகையும் வழங்கப்படுகிறது. இதனால் பலரும் மூட்டை மூட்டையாக கட்டி கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி செல்வதை காணமுடிகிறது. 24 மணி நேரமும் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் கிடைப்பதால் இளைஞர்கள் பலர் போதையிலேயே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து வேப்பந்தட்டையில் சாராயம் விற்பனை நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.