கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் தோஷம் கழிப்பதாக கூறி தங்க நகைகளை கொள்ளையடித்த பலே திருடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாய்க்கால் மேட்டுத் தெருவில் வசித்து வரும் ராஜமாணிக்கம் மகன் சீத்தாபதி என்பவரின் வீட்டில் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி பகல் நேரத்தில் தோஷம் கழிப்பதாக கூறி மர்ம நபர் 88 கிராம் எடையுள்ள 3 தங்க செயின்களை ஏமாற்றி திருடி சென்றதாக, சீத்தாபதி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி மேற்பார்வையில், கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் ஆனந்தராசு தலைமையில், குற்றப்பிரிவு தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆரோக்கியதாஸ், ஏழுமலை, மனோகர், முருகன், தலைமை காவலர்கள் வினய் ஆனந்த், பழனிசாமி, சைபர் கிரைம் இன்டலிஜென்ஸ் முருகன், முதல் நிலை காவலர் சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர், பல முக்கிய இடங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில், இன்று கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததால் காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தோஷம் கழிப்பதாக ஏமாற்றி தங்கச் செயின் திருடிய நபர் என்பதும், மேலும் இவர் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், மேட்டுக்கொல்லை, குச்சிக்கார 2வது தெருவில் வசித்து வரும் சோட்டா சாகிப் என்பவரின் மகன் பாருக்(58) என்பதும் தெரியவந்தது. உடனே காவல்துறையினர் இவரை கைது செய்து, மேலும் அவரிடம் இருந்த 11 சவரன் தங்க நகைகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, பின்னர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.