கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!!!

கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன. வனம், நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் சார்பாக அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம்  சென்னை ஐகோர்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மாநில அரசு பட்டியலில் இருந்து கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி சம்பந்தமாக சட்டங்கள் நிறைவேற்றும் மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மாநில மக்களின் கல்வித்தேவை, விருப்பம் ஆகியன சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பில் திருத்தம் கொண்டு வர முடியாது எனவும், அரசியல் சட்ட நிர்ணய சபையில் இதுசம்பந்தமாக கொண்டு வரப்பட்ட திருத்தம் நிராகரிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி,  மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான கூட்டாட்சி முறையாக இருக்கும் எனவும், மாநிலங்களுக்கு ராணுவம், அன்னிய விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பின்னர், இந்த வழக்கில் தமிழக அரசை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், மனுவுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 − = 83