மத்திய பிரதேசத்தில், கல்லூரி வளாகத்திலேயே பெண் முதல்வரை மாணவன் ஒருவன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பிரபலமான பி.எம். பார்மஸி கல்லூரி உள்ளது. இங்கு முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா(50). இவர் நேற்று மாலை கல்லூரி பணி முடிந்து 4 மணியளவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை வழி மறித்த 24 வயது இளைஞன், முதல்வரிடம் வாக்குவாதம் செய்தார். அப்பொழுது திடீரென கையில் வந்திருந்த பெட்ரோலை, விமுக்தா ஷர்மா மீது ஊாற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடினார்.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கல்லூரி முதல்வரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், 90 சதவீத தீக்காயங்களுடன் விமுக்தா ஷர்மா உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. தீ வைத்து கொளுத்திய இளைஞனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவன் முன்னாள் மாணவன் என்பதும், தனது மதிப்பெண் சான்றிதழை வழங்கிட கோரி பல முறை முதல்வரை சந்தித்தும், தராமல் இழுத்தடிப்பு செய்ததால் ஆத்திரம் தாங்காமல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.