
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண் கலைக்குழு இணைந்து நடத்திய 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஓவியம் மற்றும் சிற்பக் கலை பயிற்சி முகாம் ஸ்ரீரங்கத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி அருகே இரண்டு நாட்கள் நடைபெற்றது.
பயிற்சி முகாமை திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் துவக்கி வைத்தார். முகாமில் தமிழகத்தின் புகழ் வாய்ந்த ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள் அய்யப்பா, ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டு மரபுபாணி ஓவியம், நவீன பாணி ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம், மற்றும் மரச்சிற்பம் ஆகியன குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

நிறைவு விழா நிகழ்ச்சிக்கு திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி தலைமை தாங்கி பயிற்சி பெற்றவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். முன்னதாக திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் (பொறுப்பு) நீலமேகன் வரவேற்றார். முடிவில் திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனா லோச்சனி நன்றி கூறினார்.
