கறம்பக்குடி பகுதியில் கார்த்திகை தீபம் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பா் 6ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கறம்பக்குடி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிர மடைந்துள்ளது.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோவில்கள், வீடுகள், கடைகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி கொண்டாடுவது வழக்கம். இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூா், ராங்கியன்விடுதி, வாராப்பூா், துவரடிமனை,  கொசலக்குடி, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, அப்பகுதிகளில் உள்ள குளத்தில் இருந்து களிமண் எடுக்கப்பட்டு, சக்கரம் மூலம் விளக்குகள் தயார் செய்து அதை காயவைத்து பின்பு விறகுகள் மூலம் சூளையில் வைத்து அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கும் அகல் விளக்குகள் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து, மழையூரில் அகல் விளக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சக்திவேல் கூறியதாவது, இங்குள்ள குளத்தில் இருந்து களிமண் இலவசமாக கிடைத்தாலும் அதை எடுத்து வருவதற்கான வாகன செலவு அதிகளவில் ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 700 முதல் ஆயிரம் விளக்குகள் தயாரிக்க முடியும். ஆயிரம் விளக்குகள் ரூ.900-க்கு விற்பனை செய்கிறோம். உள்ளூா் மற்றும் வெளியூர்களுக்கும் சென்று விற்பனை செய்து வருகிறோம். முன்பு ஓராண்டு முழுவதும் வேலை இருந்தது. ஆனால், தற்போது 6 மாதங்கள் மட்டுமே வேலை உள்ளது.

இத்தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்பாண்டங்களை பாதுகாப்பாக கொண்டுசெல்ல மானியத்துடன் வாகன கடன் வழங்க வேண்டும். மழையூரில் மண்பாண்ட தொழிலாளா்களுக்காக அமைக்கப்பட்ட தொழிற்கூட பணிகள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து தொழிற்கூடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர நவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 71 = 73