கறம்பக்குடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 போ் படுகாயமடைந்தனா்.
தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி வடபாதி பகுதியை சேர்ந்தவர் மதியரசன்(27). இவருக்கு திருமணமாகி 45 நாட்களே ஆகிறது. மதியரசன் அவருடைய சகோதரி மகன் ஆசாத்(12) இருவரும் கறம்பக்குடி அருகேயுள்ள வேம்பம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிலாவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே தட்டாவூரணியை சேர்ந்த சங்கர்(45) என்பவா் கறம்பக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மதியரசன் மற்றும் சங்கர் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் மதியரசன், ஆசாத் மற்றும் சங்கர் ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மதியரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆசாத், சங்கர் ஆகியோரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கறம்பக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த மதியரசன் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். திருமணமாகி 45 நாளே ஆன புதுமாப்பிள்ளை விபத்தில் பலியானது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.