கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கெளரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தற்போது கலை அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதேபோல் அரசு கலை கல்லூரிகளிலும் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது, இந்நிலையில் அரசு கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தவிக்கும் நிலை இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் பணி ஓய்வு பெற்று செல்லும் நிலையில் கடந்த 2019 க்கு பிறகு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டு கல்லூரி நிர்வாகங்கள் இந்த பிரச்சனையை சமாளித்து வருகின்றனர்.
தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசாணை கடந்த 2019-ல் வெளியானதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு நிர்ணயித்துள்ள தகுதி அடிப்படையில் தகுதி இருந்தும் தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கௌரவ விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலை தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகிறார்கள் இவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு கறம்பக்குடி கிளைத்தலைவர் பிச்சைமுத்து தலைமையில் கிளைச் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் டேவிட் மார்ட்டின், துணைத் தலைவர் கல்யாணி, துணைச் செயலாளர் மேகலா உள்ளிட்ட அனைத்து கௌரவ விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.