
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து இரண்டு பேருந்து வழித்தடங்களை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை இன்று தொடங்கி வைத்தார்.
கறம்பக்குடியிலிருந்து பிலாவிடுதி, செவ்வாய்ப்பட்டி வழியாக பட்டுக்கோட்டைக்கும், கறம்பக்குடியிலிருந்து அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, கறம்பவிடுதி, மணமடை, கிளாங்காடு, முதலிப்பட்டி வழியாக தஞ்சாவூருக்கும் பேருந்துவசதி வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட எம்.சின்னத்துரை தான் வெற்றிபெற்றால் மேற்கண்ட கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில் மேற்படி இரண்டு வழித்தடங்களிலும் இன்று முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பேருந்துகளை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை ரிப்பன் வெட்டியும் கொடி அசைத்தும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் வி.முத்துக்கிருஷ்ணன், நகரச் செயலாளர் யு.முருகேசன், காங்கிரஸ் சார்பில் ரவி பல்லவராயர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், ஓய்வுபெற்ற உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சிவ.திருமேணிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.