கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில் கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து , முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில் கட்சித் தலைமையின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி, கர்நாடகாவில் முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் ஆகியோர் முறைப்படி இன்று பதவியேற்று கொண்டனர். இதற்காக கர்நாடகாவின் பெங்களூருவில் கன்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றன. கவர்னர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி அவர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை செய்து வைத்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில், புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கும், கவர்னர் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்து உள்ளார். இந்த நிலையில் முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே சிவக்குமார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்துக்கள். சிறப்பான பதவிக்காலம் அமைய எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.