கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்  ஒரு பெண் உள்பட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றினார்

கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் உள்பட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மை வெற்றியை பெற்றதை அடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா கடந்த 20ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருடன் சேர்ந்து கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். அதோடு, 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், இன்று அமைச்சரவை முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் எம்எல்ஏ உள்பட 24 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதற்கான விழா பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஹெச்.கே. பாடில், கிருஷ்ண பைரே கவுடா, செலுவராயசாமி, கே. வெங்கடேஷ், மாகாதேவப்பா, ஈஸ்வர் கான்ட்ரே, தினேஷ் குண்டு ராவ், சிவானந்த பாடில், எஸ்.எஸ். மல்லிகார்ஜூன், லக்ஷ்மி ஹெப்பால்கர், ரஹிம் கான், சுதாகர், சந்தோஷ், மது பங்காரப்பா, நாகேந்திரா உள்பட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அவர்களுக்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்க முடியும். அந்த வகையில், தற்போது முதல்வர், துணை முதல்வர் உள்பட 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதன்மூலம், முழு அளவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 6 பேர் லிங்காயத் சமூகத்தையும், 4 பேர் வொகாலிகா சமூகத்தையும், 3 பேர் எஸ்சி சமூகத்தையும் சேர்ந்தவர்கள். எஸ்டி பிரிவைச் சேர்ந்த இருவர், ஒபிசி பிரிவைச் சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநரும், முதல்வர் மற்றும் துணை முதல்வரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். பதவியேற்பை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 + = 28