கர்நாடகா மாநிலத்தில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த 22 வயது இளம் பெண், தனது நண்பருடன் சாமுண்டேஸ்வரி மலைப்பகுதிக்கு இயற்கை காட்சிகளை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் இருவரும் சுற்றி பார்த்துவிட்டு மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தப்பிலினள்ளி பகுதியில் வந்தபோது குடிபோதையில் அந்த வழியாக எதிரே வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவர்களை வழிமறித்து வாலிபரை கல்லால் தாக்கியதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து, அந்த கும்பல் மாணவியை வேறு இடத்திற்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், அப்பெண் மயக்கம் அடைந்துள்ளார்.
பின்னர், நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் மயங்கி கிடந்ததை பார்த்து மீட்ட நிலையில், அவர் கூறிய பின்புதான் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. உடனே, இது குறித்து ஆவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அப்பகுதியில் இருந்தவர்கள் இளம் பெண் மற்றும் வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து இந்தசம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா எல்லையில் உள்ள கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
மேலும் விசாரணையில் கைதான 5 பேரில் 4 பேர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூரை சேர்ந்தவர்கள் என்பதும், மற்றொருவர் ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அதில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பதும், கைதான 5 பேரும் கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், ஓட்டுநராக மைசூரில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேரில் தலைமறைவாக உள்ள எஞ்சிய ஒருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் நண்பருடன் இயற்கை காட்சியை சுற்றிபார்க்க சென்ற இளம்பெண்ணிற்கு இக்கொடூரம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.