கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசு மதுபான கடையில் இளைஞரை திட்டமிட்டு கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பஞ்சப்பட்டி டாஸ்மாக் அருகே கடந்த 9 -ஆம் தேதி அதிகாலையில் கவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவர் தலை மற்றும் காலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர்.
விசாரணையில், ராஜீவ் காந்தியின் நண்பர்களாகிய ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த நவாஸ் மற்றும் அவரது நண்பர் பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கருப்புசாமி ஆகிய இருவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராஜீவ் காந்தியின் மனைவியை, நவாஸ் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி வந்ததாகவும் இதில் ஏற்பட்ட தகராறில், கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. குற்றத்தை நவாஸ் மற்றும் கருப்புசாமி ஒப்புக்கொண்டதையடுத்து, இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.