கம்போடியாவில்50000 கம்புகளுடன் நீளமா மூங்கில் பாலம்

இயற்கையின் படைப்புகள் அல்லது இயற்கையான பொருட்களை கொண்டு மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் என ஒவ்வொன்றும் அழகுதான்.

உதாரணத்திற்கு அலையாத்தி காடுகளாகட்டும் அல்லது இயற்கையான கல் பாலமாகட்டும், ஒவ்வொன்றும் பேரழகைக் கொண்டிருக்கும். அதில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி, பாய்ந்தோடும் ஆறு, உயர்ந்த மலைப்பிரதேசங்கள், பறந்து விரிந்த கடல் போன்றவை பேரழகை கொண்டிருக்கும்.

அதேபோல கடல் அல்லது ஆறுகளின் மீது போக்குவரத்திற்காக கட்டப்படும் ஓரடுக்கு பாலம், இரண்டடுக்கு பாலம் போன்றவை பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். இயற்கையின் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிப்பதற்காக ஆறுகள் அல்லது கடலின் குறுக்கே அமைக்கப்படும் தொங்குபாலம், மரப்பாலம் போன்றவை நம் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கம்போடியாவில் உள்ள கோபியான் தீவுக்கு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் மெகோங் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படுகின்ற மூங்கில் பாலம் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. சுமார் 3 ஆயிரம் அடி நீளம் கொண்ட இந்தப் பாலம்தான் உலகிலேயே மிக நீளமான மூங்கில் பாலம் ஆகும். இந்த தீவில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கு கேம்போங் சாம் நகருடன் இணைப்பை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பாலம் செயல்படுகிறது.

மூங்கில் பாலமானது 50 ஆயிரம் கம்புகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இது கோடைகாலத்தில் ஆற்றில் நீர் வற்றும் சமயங்களில் மட்டும்தான் பயன்பாட்டில் இருக்கும். மழைக்காலம் நெருங்கி வரும் சமயத்தில் பாலத்தை கலைத்து, மீண்டும் கட்டுமானம் மேற்கொள்வதற்காக கம்புகளை பாதுகாப்பாக அடுக்கி வைத்து விடுவார்கள். மழைக்காலத்தில் இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்காக படகுகளை பயன்படுத்துவார்கள். ஆனால், கோடைகாலத்தில் தண்ணீர் வற்றி படகு செல்லுகின்ற அளவுக்கு நீர் இல்லாத சூழலில், மரப்பாலத்தை கட்டமைத்து அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கோடை காலத்தில் மரப்பாலம் அமைக்கும்போது முதலில் பெரும் மரங்களைக் கொண்டு பலமான அடித்தளம் அமைக்கின்றனர். அதேபோல பாலம் அகலமானதாகவும், பலமானதாகவும் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தில் இலகுரக வாகனங்கள் சென்றுவர அனுமதி அளிக்கப்படுகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் ஏதோ தீக்குச்சிகளை அடுக்கி வைத்ததைப் போல தெரியுமாம்.

இலகுரக வாகனங்களின் கணக்கின் கீழ் இரு சக்கர வாகனங்களும், கார்களும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனத்தின் எடை மிகுதியாக இருப்பின், மூங்கில் மரங்கள் வளைந்து கொடுத்தாலும் உடையாதாம். இதனால், பயணம் என்பதே ஊஞ்சலில் செல்வதைப் போலத்தான் இருக்கும். அதிலும் மூங்கில் மரத்தின்மீது டயர்கள் ஓடுகையில் ஏற்படுகின்ற ஒருவித ரீங்கார ஒலி மக்களை குதூகலமாக்குகிறது.

மூங்கில் பாலத்தில் பயணம் செய்ய சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு 100 ரியல் (ரூ.2.02) வசூல் செய்யப்படுகிறது. அதுவே சுற்றுலாப் பயணிகள் என்றால் 40 மடங்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டுமாம். பொதுவாக இந்த பாலத்தின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.