கன்னத்தில் அறைந்த தலைமைக் காவலரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்: அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம்


அறந்தாங்கியில் குப்பை கொட்டுவது தொடர்பான இடப்பிரச்சினைக்காக விசாரணைக்குச் சென்ற முதியவரை கெட்ட வார்த்தையில் திட்டி கன்னத்தில் அறைந்த தலைமை காவலரை நிரந்தர பணி நீக்கம் செய்வதோடு அவர் மீது வழக்குப் பதியக்கோரி
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினகோட்டையைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன், ஆறுமுகம் இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் குப்பை கொட்டுவது தொடர்பாக இடப் பிரச்சினை இருந்துள்ளது.இது தொடர்பாக அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் விசாரனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காவல் நிலையம் சென்ற, இரண்டு தரப்பினரையும் தலைமைக் காவலர் முருகன் விசாரித்துள்ளார். அப்போது ராதாகிருஷ்ணனிடம் தலைமைக் காவலர் முருகன்பேசும்போது ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்து அவரை கெட்ட வார்த்தையில் திட்டியதுடன் வயதானவர் என்றும் கூட பார்க்காமல் கன்னத்தில் ஓங்கி அடைகிறார். இதனை அங்கிருந்த ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் செல்போனில் வீடியோ எடுத்து அதனை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொண்டு சென்று வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தனர். வீடியோ ஆதாரம் அடிப்படையில் தலைமைக் காவலர் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார். பின்னர் மேல் விசாரணை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை காவலர் முருகனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் வயதில் மூத்தவர் எனப் பாராமல் முதியவரை தாக்கிய தலைமைக் காவலரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது வழக்கு பதிய வேண்டும் எனக்கோரி வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.