டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டெல்லியில் நேற்று இரவு முதல் 13 செ.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
டெல்லி சப்தர்ஜங் பகுதியில் 73.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. ஆசாத் மார்க்கெட் பகுதியில் கனமழை பெய்து 1.5 அடி அளவுக்கு நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் இந்த வழி மூடப்படுகிறது என டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர். ஆசாத்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
இதேபோன்று, டெல்லியின் பிரகதி மைதான், லஜ்பத் நகர் மற்றும் ஜங்புரா பகுதிகள், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. மூல்சந்த் பகுதியில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் நீரில் மிதந்தபடியே செல்ல வேண்டி இருந்தது.
இதனை தொடர்ந்து வாகன போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. நீர் தேங்கிய சூழலில் மின்டோ பிரிட்ஜ் பகுதியில் உள்ள சாலை மூடப்பட்டு உள்ளது என்றும் டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.