புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் வட்டார அளவிலான இலக்கிய மன்ற கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாதம் தோறும் ஒளிபரப்பப்படும் சிறார் திரைப்படம், பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் சார்ந்த திறனாய்வு செய்தல், பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிடும் சிறார் மாத இதழான தேன் சிட்டு இதழில் வரும் அறிவுசார் தகவல்கள் சார்ந்த வினாடி வினா போட்டி ஆகியவற்றிற்கான போட்டிகள் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று போட்டிக்கான ஏற்பாட்டினை வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த போட்டியினை வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் முத்துக்குமார் ஒருங்கிணைத்தார். நடுவர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் ராஜாமணிக்கம், விஜயராணி, அலமேலு, சுப்புலட்சுமி ஆகியோர் செயல்பட்டனர். இப்போட்டியில் அறிவியல் அற்புதங்கள், வாழ்க்கையின் இலட்சியம் ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் பாராட்டி பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பாரதிதாசன், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.