கந்தர்வகோட்டை ஸ்டேட் பேங்க் தினமும் தாமதமாக திறக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கந்தர்வகோட்டை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சேமிப்பு கணக்கு தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வங்கி தினமும் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால் தினமும் காலதாமதமாக திறக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர். குறிப்பாக நேற்று காலை 11 மணிக்கு வங்கி திறக்கப்பட்டது. பொதுமக்களையும் வாடிக்கையாளர்களையும் மேலும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால் பணம் எடுக்க, செலுத்த முடியாமல் மருத்துவமனைக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் தாமதமாக தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆகையால் வங்கி உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு உரிய நேரத்திற்கு வங்கி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.