கந்தர்வகோட்டை அருகே குடும்பத்தகராறில் விபரீதம் மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன் கைது: மைத்துனர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள வடுகப்பட்டியில் குடும்ப பிரச்சனையில் மாமனார் சைவராஜை மருமகன் ரவிச்சந்திரன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதை தடுக்க வந்த மைத்துனர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமனாரை கொன்ற ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகிலுள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவராஜ். இவரது மகள் லதாவை அதே கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ரவிச்சந்திரன் ராணுவத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில் ரவிச்சந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது மனைவி லதா தற்போது தந்தை சைவராஜ் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கிடையே புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் மனைவி லதாவின் பராமரிப்பில் இருக்க நீதிபதி உத்தரவிட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக ரவிச்சந்திரன் புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு ஆத்திரத்தில் கந்தர்வகோட்டை திரும்பினார்.

மாமனார் ஊரான வடுகப்பட்டிக்கு ரவிச்சந்திரன் செல்லும் போது அங்கு மாமனார் குடும்பத்தாரிடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மைத்துனர் உட்பட அனைவருக்கும் கைகலப்பு நடந்துள்ளது. தான் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்து மாமனார் சைவராஜை ரவிச்சந்திரன் சுட்டுக்கொலை செய்துள்ளார். இதை தடுக்கவந்த மைத்துனர் முருகேசனை துப்பாக்கி கட்டையால் திருப்பி தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று ரவிச்சந்திரனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் கந்தர்வக்கோட்டை (பொ) திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஈடுபட்டிருந்தார். தகவலறிந்த புதுக்கோட்டை டி.எஸ்.பி., ராகவி சம்பவ இடம் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஏற்பட்டதால் மக்கள் கலைந்து சென்றனர்.

சுட்டுக்கொலை செய்யப்பட்ட சைவராஜ் உடல் புதுகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 88 = 90