அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அலுவலருமான சாமி சத்தியமூர்த்தி 1.05 லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கியிருந்தார். அதனை பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்வு கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை திறந்து வைத்து மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் வெ.பழனிவேல் அனைவரையும் வரவேற்றார். கந்தர்வகோட்டை ஒன்றிய குழு உறுப்பினரும், அட்மா குழு தலைவருமான எம் ராஜேந்திரன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆ வனிதா,மேலாண்மை குழு மேனாள் துணைத் தலைவர் எம்.சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சாமி. சத்தியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்வில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர், பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்,பள்ளி மாணவர்களின் அடிப்படை தேவையான குடிநீரை சுத்திகரித்து வழங்குவது மிகச் சிறப்பான பணியாகும். இந்தப் பணியின் மூலம் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதோடு, ஐக்கிய நாட்டு சபையின் பிரதான நோக்கமும் இந்த நிகழ்வின் மூலம் நிறைவேறியுள்ளது.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.அதில் முன்னாள் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் அரசு பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நமது பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இது போன்ற திட்டங்கள் அரசு பள்ளிகளை மேம்படுத்த பயன்படும் என்றார். நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பாளர் எம்.சீனிவாசன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முரளிதரன்,ஆசிரியர்கள் மாரிமுத்து,ஐயப்பன்,செல்வமணி,பாத்திமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இறுதியில் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் நன்றி கூறினார்.
