கந்தர்வகோட்டையில் சிகிச்சை பெற வந்த நோயாளியிடம் அலட்சியமாக நடந்து கொண்ட அரசு மருத்துவரை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
கந்தர்வகோட்டை காந்தி சிலையில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவமனை இரவு நேரங்களில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் அலட்சியமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு பொதுவாக எழுந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு அடிபட்ட நபர் சிகிச்சைக்கு வரும்போது பணியில் இருந்த மருத்துவர் தனியார் மருத்துவமனைக்கு செல்ல சொன்னதாக கூறி தனது ஆதங்கத்தை நோயாளி தனது நண்பர்களிடம் தெரிவித்தார். நோயாளி கார்த்தியின் நண்பரான பாரதிய ஜனதா ஒன்றிய செயலாளர் தவமணி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பணியில் இருந்த மருத்துவரிடம் முதலுதவி ஏன் செய்ய மறுக்கிறீர்கள் என கேட்டபோது, மாத்திரை மட்டும் தான் தருவோம் ஊசி போட மாட்டோம் என கூறியதாகவும் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயலாளர் தவமணி தலைமை மருத்துவர் ராதிகாவிடம் நடந்ததை கூறியுள்ளார்.
உடனடியாக தலைமை மருத்துவர் பணியில் இருந்த மருத்துவரை தொடர்பு கொண்டு நடந்ததை விசாரித்து உரிய நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறக்கூடாது எனவும் பொதுமக்களை அலட்சியம் செய்யக்கூடாது எனவும் இது போல் நடந்து கொண்டால் மருத்துவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.