புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளியில் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு உதவி தலைமை ஆசிரியர் வின்னரசி தலைமை தாங்கினார், இந்நிகழ்வு கந்தர்வக்கோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்தி வருகிறது என்றும், தேசிய குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்க கூடிய வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
அம்மாநாட்டில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு இளம் விஞ்ஞானி விருதுகளையும் வழங்குகிறது, மாவட்ட இணைச் செயலாளர் துரையரசன் பேசும் பொழுது அறிவொளி இயக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கமாக வளர்ச்சி பெற்று தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்று பேசினார்.
வட்டாரத் தலைவர் ரகமதுல்லா பேசும் பொழுது மாணவர்களுக்கு மாதம் தோறும் வெளிவரும் விஞ்ஞான துளிர் மாத இதழ்களையும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியே வரும் ஆங்கில அறிவியல் இதழ் ஜந்தர், மந்தர் இதழையும் மாணவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும், அறிவியலில் பொது அறிவை வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கி வருகிறது. வட்டாரச் செயலாளர் சின்ன ராஜா பேசும்போது துளிர் திறனறிவுத் தேர்வு குறித்து பேசினார். தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழும் விஞ்ஞான துளிர் இதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் காளிமுத்து, ஆசிரியை மாரியம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர், நிறைவாக ஆசிரியை பிரீத்தி நன்றி கூறினார்.