கண்ணூர் பல்கலை பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டு இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் பல்கலையில் முதுகலை பட்டப் படிப்பிற்கான 3வது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்துத்துவ சிந்தனையாளர்களான கோல்வால்கர், சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரைப் பற்றி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படிப்பு தலசேரியில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் கற்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.கேரள மாணவர் சங்கம், காங்கிரஸ் மாணவர் பிரிவு, முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் பிரிவு ஆகியோர் இது காவிமயமாக்கலுக்கான முயற்சி எனக்கூறி, பாடத்திட்டத் தாள்களை நகலெடுத்து, அவற்றை எரித்தனர். காவிமயமாக்கல் குற்றச்சாட்டுக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் கூறும்போது, ‘அரசியல் சிந்தனைகள் மற்றும் வரலாற்றைப் படிக்கும்போது அதன் அனைத்துப் பக்கங்களும் விவாதிக்கப்பட வேண்டும். எனினும் இதுகுறித்து வெளியான தகவலின்படி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதா, வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்’ என்றார்.இந்நிலையில், மாநில அரசு இதுகுறித்துப் பல்கலைக்கழகத்திடம் இருந்து அறிக்கை கோரியுள்ளது. அதேபோலப் பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய, கேரளப் பல்கலைக்கழக முன்னாள் சார்பு துணைவேந்தர் பிரபாஷ் தலைமையில் இரு நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.