கடலூர் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதில் மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி நடராஜர் கோவிலில் இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது. நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசன விழா அன்று அதிகாலை 2 மணிக்கு மேல் மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நாளை (வெள்ளிக்கிழமை) அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள், அவசர பணிகளை கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 3