கடன் வசூல் நெருக்கடி தொல்லையால் கரூர் அருகே விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு விவசாய முன்னேற்ற கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் செல்ல.ராசாமணி, பொதுச்செயலாளர் கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் பாரத நிதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.,
தமிழ்நாட்டில் இரு வாரங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஜீயபுரம் அருகில் விவசாயி மருதமுத்து என்பவர் விவசாயத்திற்கு வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் வங்கி ஊழியர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அந்த துயர செய்தி மறைவதற்குள் தற்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டிராக்டர் வாங்குவதற்காக வங்கிக் கடன் பெற்று , கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாய விளைப்பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் தான் வாங்கிய விவசாய கடனை கட்ட முடியாமல் இருந்த அவரை வங்கி ஊழியர் மிரட்டியதால் வடிவேல் வயது (38) என்ற இளம்விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொரோனா காலகட்டத்தில் விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததோடு, ஆட்கள் பற்றாக்குறை, நாளும் பூச்சிக்கொல்லி மற்றும் உர விலையேற்றத்தாலும், இது போன்ற கடன் தொல்லைகளாலும், விவசாயிகள் இப்படி செத்து மடியும் அவலமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசு பெரிய பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்வதாக செய்தித்தாளில் செய்தி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் 130 கோடி மக்களுக்கும் உணவளிக்கும் விவசாயிகளுக்கு, அவர்கள் வாங்கிய பயிர் கடன்களுக்கான குறைந்த வட்டியை கூட தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வங்கிகளில் விவசாயிகள் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் அவர்களுடைய விவசாய நிலத்தையும் ஏலம் விடுகிறார்கள். விவசாயிகளுக்கு அவர்கள் விளைவித்த விளைப்பொருட்களுக்கு போதுமான விலை, கட்டுபடி ஆகக்கூடிய லாபம் இருந்தால் எந்த விவசாயியும் வங்கியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
மேலும் அவர்கள் கடனை வாங்கி உழவு செய்து உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து, நாட்டு மக்களுக்கு வழங்கியும் அவர்களுக்கு இறுதியில் கிடைக்கும் பரிசு வங்கி ஊழியர்களின் இழிவான பேச்சும், வசைச்சொற்களும், மிரட்டலும்தான்.
வங்கி ஊழியர்களின் இப்படிப்பட்ட செயல்பாடு விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் வங்கி ஊழியர்களுக்கு விவசாயிகளிடம் எவ்வாறு கடன் வசூல் செய்வது, அவர்களின் தற்போதைய உண்மை நிதி நிலவரம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி கடன் வசூல் செய்வதற்கு அரசு வங்கிகளுக்கு கடுமையான நெறிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் வகுத்திட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் திருச்சி மாவட்டம், மற்றும் கரூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்களால் மிரட்டப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு மத்திய அரசும், சம்பந்தப்பட்ட வங்கிகளும் உடனடியாக நிவாரணத் தொகையை வழங்கிட ஆவண செய்து உத்தரவிட வேண்டும்.
மேலும் தமிழக அரசு காலதாமதம் இல்லாமல் தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் மத்திய அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து தள்ளுபடி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யுமாறு விவசாய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மத்திய நிதியமைச்சரிடம் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.