கடந்த ஆட்சியில் சுகாதாரம், நெடுஞ்சாலை உள்ளிட்ட 4 துறைகளில் ரூ1,000 கோடி ஊழல் சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உயர்கல்வித்துறை, நகராட்சி துறை உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான சட்டமன்ற ஆய்வுக் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஆய்வுகளை மேற்கொண்ட பின் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்த கணக்கு வழக்குகளை சரிபார்த்தனர்.

அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை பொது கணக்கு குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறையில் காலாவதியான மருத்து வாங்கியது. அதேபோல் நகராட்சி, நெடுஞ்சாலை, உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் ஆயிரக்கணக்கான கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசின் பணம் பெரிய அளவில் விரயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ரூ-147.26 கோடி வராமல் போய்விட்டது.

மதுரை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கடந்த ஆட்சியில் மருந்துகள் வாங்கியதில் ரூ.27 கோடி முறையீடு நடந்துள்ளது. இது தொடர்பாக நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் மார்க் லிஸ்ட் தயார் செய்வதில் ரூ.77 கோடி முறைகேடு நடந்துள்ளது ஆய்வின் போது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவிரி – குண்டாறு திட்டத்திற்கு கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா? அதில் ஏதும் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம். தொடர்ந்து இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யவும் புதுக்கோட்டை ராஜகோபாலத் தொண்டைமானுக்கு மணிமண்டபம் விழா கமிட்டியாளர்கள் விரும்பும் இடத்தில் அமைக்கவும் பரிந்துரை செய்வோம்.

நகராட்சி துறையில் கடந்த 2016-17ம் ஆண்டு பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. புதுக்கோட்டையில் கடந்த ஆட்சியில் தனிநபர் ஒப்பந்ததாரர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு பெரிய அளவிலான பணம் அரசு பணம் சென்றுள்ளது குறித்தும் விசாரணை நடத்த உள்ளோம். அறந்தாங்கி நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றுவதற்காக 2007ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தத் திட்டத்தை சரியாக கையாளவில்லை. 2018ம் ஆண்டில் கசடு கழிவுநீர் மேலாண்மைத் திட்டம் அறிவிக்கப்பட்டு ரூ.222 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் முறையாக நடைபெறவில்லை. அரசு பணம் நஷ்டமானதாக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

ஆய்வின் போது, இந்த கூட்டத்தில் குழுவில் இடம் பிடித்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் காந்திராஜன், சரஸ்வதி, சிந்தனை செல்வன், சுதர்சனம், பூண்டி கலைவாணன், மாரிமுத்து, வேல்முருகன், சின்னத்துரை, மரகதம் குமாரவேல், சார்பு செயலாளர் பால சீனிவாசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 − = 59