
கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். இந்த அமைப்பின் கூட்டம் இன்று காலை டில்லியில் நடக்கிறது.
நாட்டை காக்கும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கோபால் ஷர்மா, 79, ஹெம் லோகுமி, 70, மனோஜ் கேஷ்வர், 53, ஆகியோர் ஆறுகளை காக்க களம் இறங்கியுள்ளனர். இதற்காகவே, ஹரியானா மாநிலம் குர்கானில் ‘அதுல்ய கங்கா’ என்ற அமைப்பை துவக்கியுள்ளனர். இந்த அமைப்பு ஹரித்துவாரில் இருந்து கோமுகி வரை, கங்கை ஆற்றை சுத்தம் செய்யும் பணியில், 11 ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்த அமைப்பில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உட்பட ஏராளமான இளைஞர்களும் தன்னார்வல தொண்டர்களாக இணைந்துள்ளனர். இந்த அமைப்பின் சார்பில், 2020ம் ஆண்டு டிச., 16ல், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துவங்கிய கங்கையை துாய்மைப் படுத்தும் முகாமை, உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஜூன் 23ம் தேதி நிறைவடைந்த இந்த முகாமில், 190 நாட்களில் 5,530 கி.மீ., துாரத்துக்கு கங்கை ஆற்றின் கரைப் பகுதிகளில் தேங்கிக் கிடந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. ஆறுகள் அழிந்தால் எதிர்காலத்தில் மனிதர்கள் மட்டுமின்றி, அனைத்து உயிர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் என்பதை ‘அதுல்ய கங்கா’ அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்த இயக்கத்தில் நாளுக்கு நாள் தன்னார்வலர்கள் இணைந்து வருகின்றனர்.
இந்த அமைப்பில் இணைய விரும்புவோர், www.atulyaganga.com என்ற இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த அமைப்பின் பணிகள் குறித்த கூட்டம், டில்லி உள்ள தான்சென் மார்க் திரிவேணி அரங்கத்தில், இன்று காலை 10:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் நிபுணர்கள் பங்கேற்று பேசுகின்றனர். மதியம் 2:00 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.