கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழர் நீதி கட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அரியலூர் காமராஜர் திடலில், மாவட்ட தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் இணைத்து நடத்திய, கொள்கை விளக்க முப்பெரும் விழா பொதுக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலையா வரவேற்று பேசினார்.
தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்க நிறுவனத் தலைவர் சுபா இளவரசன், மாநில மகளிர் அணி தலைவி கவியரசி, தலைமை நிலைய செயலாளர் மதியழகன், மாநிலத் துணைத் தலைவர் தங்கத்தமிழன், ஏர் உழவன் சங்க துணை தலைவர் ஆசைத் தம்பி, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், உள்ளிட்ட பலரும் பேசிய இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
அரியலூர் மாவட்டம் முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் சிமெண்ட் சாலைகள், மக்கள் வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்ட் மூட்டைகளை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி உள்ளிட்ட பாசன ஏரிகள் அனைத்தையும், இம்மாவட்டத்தில் செயல்படும் சிமெண்ட் ஆலை நிர்வாகங்கள் சார்பில் ஆழப்படுத்தி, அதில் எடுக்கும் மண்ணை, சிமெண்ட் ஆலைகளால் ஏற்படுத்தப்பட்ட பள்ளங்களை சமப்படுத்தி, நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு அவற்றை வழங்கிட வேண்டும்.
சிமெண்ட் ஆலைகளின் செயல்பாடு காரணமாக, சிமெண்ட் ஆலை மற்றும் சாலை விபத்துகளில் உயிர் இழப்பு ஏற்படும் குடும்பங்களுக்கு, உரிய நஷ்ட ஈடு வேலைவாய்ப்பு ஆகியவற்றை , சிமெண்ட் ஆலை நிர்வாகங்களே வழங்க வேண்டும்.
அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில், மனகெதி கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை, உடனடியாக அகற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும், புளியமரம், அரசமரம், பனைமரம், இலுப்பை மரம், வேப்பமரம் உள்ளிட்ட, நிழல் தரும் மரக்கன்றுகளை நட வேண்டும்.
சோழர்களின் வரலாற்று சிறப்புமிக்க தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில், அதை உருவாக்கிய மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு, மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் இருந்து பொன்னேரிக்கு நீர் வழிப்பாதை அமைத்து, விவசாய மேம்பாட்டுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு அறிவித்த முந்திரி தொழிற்சாலையை, அரியலூரில் உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.