ஓ.எம்.ஆர் சாலையில் சுங்க வசூல் வரும் 30ம் தேதியோடு நிறுத்தப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சுங்க வசூல் வரும் 30ம் தேதியோடு நிறுத்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு திட்டங்களை அறிவித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வகையில் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில்:நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள 1281 பழைய தரைப்பாலங்களை ரூ.2401 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்களாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதை முன்னிட்டு ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது ஆகஸ்ட் 30 முதல் நிறுத்தப்படுகிறது.

16 மாவட்டங்களில் உள்ள 558 கிராமங்களில் வசிக்கும் சுமார் 15 லட்சம் மக்கள் பயனடையும் வகையில், ரூ.425 கோடி மதிப்பில் 75 ஆற்றுப்பாலங்கள் நபார்டு வங்கி கடன் உதவியுடன் கட்டப்படும்.மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்காக மதுரை சுற்றுச் சாலையில் ஒரு கிமீ நீள வாகன சுரங்கப் பாதை ரூ.200 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.1957ம் ஆண்டு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. சாலை மற்றும் பாலங்கள் அமைப்பதிலும் ஆராய்ச்சியிலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அதி நவீன கட்டமைப்பைக் கொண்டுள்ளன.அதற்கு இணையாக புதிய விஞ்ஞான உபகரணங்களை கொள்முதல் செய்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் உலகத்தரம் வாய்ந்ததாக மேம்பாடு செய்யப்படும்.சாலை விபத்துகளை குறைப்பதற்காகவும் உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்காகவும் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.200 கோடியும் விபத்து பகுதிகளை மேம்படுத்துவதற்கான சாலை பாதுகாப்பு நிதியில் ரூ.150 கோடியும் ஆக மொத்தம் ரூ.350 கோடி நிதியில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்ய பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.