ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டிச்சென்றவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு – முக.ஸ்டாலின் இரங்கல்

ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் ஓட்டிச்சென்றவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் இருப்பவர் பிரகாஷ். இவருடைய 24 வயதான மகன் கருணாசாகர் உள்ளிட்ட 7 பேர் பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, நேற்று நள்ளிரவு ஓசூருக்குக் காரில் திரும்பியுள்ளனர். சுமார் 2 மணியளவில் கார் பெங்களூரு கோரமங்கலா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் விபத்தில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் காரில் பயணித்த ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர், கேரளாவை சேர்ந்த ஒருவர், வடமாநிலத்தவர் இரண்டு பேர் மற்றும் 3 பெண்களும் என 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஆடுகொடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விபத்து எப்படி நடந்தது? காரை ஓட்டியது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த காரை எம்எல்ஏவின் மகன் ஓட்டியுள்ளார் என்றும், கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதி விபத்திற்குள்ளானது என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் காரில் இருந்தவர்கள் யாரும் சீட் பெல்ட் அணியாததால், ஏர்பேக் திறக்காமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக எம்எல்ஏ பிரகாஷின் மனைவி சிவம்மா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்குள்ளாக, எம்எல்ஏ பிரகாஷ் சாலை விபத்தில் மகனையும் பறிகொடுத்திருக்கிறார். இது அவரையும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- திமுக ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷின் மகன் கருணாசாகர், பெங்களூரு அருகே நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கோர விபத்துக்கு தன் அன்பு மகனை பறிகொடுத்து இருக்கும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாசுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. அன்பு மகனை இழந்து தவிக்கும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.