ஒடப்பவிடுதி பள்ளியில் கதை சொல்லல் நிகழ்வு டேனி பட இயக்குனர் சந்தானமூர்த்தி பங்கேற்றார்

மாணவர்களிடையே கதை சொல்லும் பழக்கத்தினை ஊக்கப்படுத்தும் விதமாகவும் கதை கேட்டலின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும வகையில் கதை சொல்லல் நிகழ்வு ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டேனி திரைப்பட இயக்குனர் எல்.சி.சந்தானமூர்த்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு நாட்டார் கதைகள், வாழ்வியல் கதைகள் போன்ற பல்வேறு வகையான கதைகளை கூறினார்.பிறகு அந்தக் கதைகள் குறித்து மாணவர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கு விளக்கங்களை இயக்குனர் கூறினார்.பின்னர் மாணவர்களும் தங்களுக்கு தெரிந்த கேட்ட கதைகளை கூறக் கேட்கப்பட்டது.மாணவர்கள் சொன்ன கதைகளில் சில கதைகள் பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி தற்போதைய மாணவர்களுக்கு கடத்தப்பட்டு வருவது நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் நெகிழ்வடையச் செய்தது.மதிய நிகழ்வாக மாணவர்களை ஐந்து அணிகளாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் வாழ்வியல் சார்ந்த பெயர்களாலான பள்ளிக்கூடம், பொட்டுக்கடலை, விவசாயம்,காட்டாறு,நெல்வயல் என்பதாக மாணவர்களாலாயே பெயரிடப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறச் செய்யப்பட்டது.

மாணவர்கள் குழுவாக ஒருங்கிணைந்து கலந்துரையாடி சொந்தமாக கதை ஒன்றை எழுத கேட்டுக் கொள்ளப்பட்டது.நிகழ்வின் முடிவில் ஒவ்வொரு குழுவும் தாங்கள் எழுதிய கதைகளை சார்பாக குழுத்தலைவர்கள் வாசித்தார்கள். மாணவர்களின் கதைகள் அன்பு,மது ஒழிப்பு,இயற்கை வள பாதுகாப்பு மற்றும் மக்களின் மனநிலைகள் ஆகிய தலைப்புகளில் வாழ்வியல் சார்ந்தும் சமூக பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவும் இருந்தது.முழுநாள் நிகழ்வாக நடைபெற்ற இந்த கதை சொல்லல் நிகழ்வில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று மிகச்சிறந்த உரையாடல்களை இயக்குனருடனும் ஆசிரியர்களுடனும் மேற்கொண்டனர். நிகழ்வில் பேசிய இயக்குனர் அவர்கள் கதை சொல்வதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்றும் மாணவர்களின் கற்பனை திறன்,படைப்பாற்றல் திறன்,ஆளுமை வளர்ச்சி,கேள்வி கேட்கும் திறன் மற்றும் ஒவ்வொரு கருத்துகளையும் புரிந்துகொண்டு உள்வாங்கும் திறன் எவ்வாறு பரிணாமம் அடைகிறது என்பதை எடுத்துக் கூறினார். இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மரிய துரைசிங்கம் தலைமை வகித்தார்.
சமூக ஆர்வலர் அன்பழகன் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். பள்ளியின் ஆசிரியர் அப்பு அவர்கள் தொகுத்து வழங்க பள்ளியின் ஆசிரியர்கள் சாமியப்பன், சிவரஞ்சனி,திவ்யா, கில்பர்ட் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 − 16 =