ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிக்காக கோல் அடித்த முதல் இந்தியர்

ஐரோப்பா கால்பந்து கிளப் அணிக்காக கோல் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் மனிஷா கல்யாண்.

யுஇஎப்ஏ மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனிஷா கல்யாண் பெற்றுள்ளார். இவர் அப்பல்லோன் எப்சி அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இதில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அப்பல்லோன் எப்சி மற்றும் ஜார்ஜியாவின் சாமேக்ரெலா எப்சி அணிகள் மோதின. இதில் மனிஷா கல்யான் கோல் அடித்தார். இதன் மூலம் யுஇஎப்ஏ மகளிர் சாம்பியன்ஸ் லீக்கில் கோல் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், நான் பெரும்பாலும் பயிற்சிக்காக முதல் ஆளாக களத்திற்கு செல்கிறேன், கடைசியாக வெளியேறுகிறேன். இது எனது கடின உழைப்புக்கு போதுமான சான்றாகும். அசைக்க முடியாத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியால் இதை ஈட்டினேன். ஆனாலும், நான் திருப்தியடையவில்லை, நான் ஓய்வெடுக்கப் போவதில்லை. இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.