ஏலாக்குறிச்சியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில், அருள்நிறை அடைக்கல மாதா திருத்தலம் உள்ளது. கும்பகோணம் மறை மாவட்டத்திற்கு உட்பட்ட இந்த தேவாலயம், கடந்த 1716-ம் ஆண்டு வீரமாமுனிவர் எனப்படும் ஜோசப் கான்ஸ்டன்ட்டைன் பெஸ்கி என்பவரால் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் 36 ஆண்டுகள் வாழ்ந்த வீரமாமுனிவர், 25 ஆண்டுகளுக்கு மேல் ஏலாக்குறிச்சியில் தங்கி, தேம்பாவணி, திருக்காவலூர் கலம்பகம் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார்.
அன்றைய காலகட்டத்தில், அரியலூர் ஜமீன்தார் அரங்கப்ப மழவராயர் என்பவருக்கு ஏற்பட்ட, ராஜ பிளவை என்னும் நோயை குணப்படுத்தியதால், அவர் ஏலாக்குறிச்சியில் உள்ள 175 ஏக்கர் நிலத்தை, அடைக்கல மாதா ஆலயத்திற்கு தானமாக கொடுத்தார் என, இங்குள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த, ஏலாக்குறிச்சி அருள் நிறை அடைக்கல மாதா திருத்தலத்தின் சார்பில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம், ஏலாக்குறிச்சி கடை வீதியில் இருந்து திருத்தலத்தின் பங்குத்தந்தை தங்கசாமி தலைமையில் துவங்கியது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக, ஏலாக்குறிச்சி தேவாலயத்திற்கு சென்றடைந்தது.

ஞாயிறு குருத்தோலை விழாவை முன்னிட்டு, கோயிலின் பங்குத்தந்தை தங்கசாமி, உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் ஆகியோர், சிறப்பு திருப்பலியை நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த பங்கு மக்கள் உள்ளிட்ட பலருக்கும், உணவு வழங்கப்பட்டது.
பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்ட இந்த ஞாயிறு குருத்தோலை ஊர்வலம் மற்றும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகளில், அரியலூரை சேர்ந்த சேசுமணி, ஆரோக்கியசாமி, ஜூனியஸ், அந்துவான், சேவியர், சகாயதாஸ், ஆரோக்கியம், மற்றும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இதே போல அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சர்ச்சுகள் சார்பிலும், ஞாயிறு குருத்தோலை விழா நடைபெற்றது.