ஏம்பல் பேருந்து நிலையம் மற்றும் பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பேருந்து நிலையம், பள்ளிக்கூடம், கோயில் மற்றும் ரேஷன் கடை அருகில் அரசு மதுபான கடை 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழ்கின்ற பொதுமக்களுக்கும், பள்ளி வந்து செல்கின்ற மாணவ மாணவிகளுக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் இருந்து வந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று ஏம்பலில் வாழுகின்ற அப்பகுதி மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று இதுவரை கூறிவந்த நிலையில் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தவில்லை.

எனவே விடுதலை சிறுத்தை கட்சியினர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் உடனடியாக ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சமாதான கூட்டம் இன்று ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு டாஸ்மாக் உதவி மேலாளர் கருப்பையா, அறந்தாங்கி கோட்டைகளால் அலுவலர் வில்லியம்ஸ் மோசஸ், ஏம்பல் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், உட்பட ஏம்பல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மீனவர் மேம்பாட்டு பேராயம் மாவட்ட செயலாளர் பீட்டர் வளவன், அரிமளம் ஒன்றிய பொறுப்புச் செயலாளர் சுடர் மணி, மீனவர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் ஷாஜகான், உள்ளிட்டோர் சமாதான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள், இதில் 5 மதத்திற்குள் வேறு ஒரு இடத்திற்கு மதுக்கடையை அகற்ற அதிகாரிகள் ஒப்புக்கொண்டதால் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் தற்சமயம் கைவிடப்பட்டது.