எவரெஸ்ட் சிகரம் அருகே ஹெலிகாப்டர் விபத்து 6 பேர் பலி

எவரெஸ்ட் சிகரம் அருகே நேபாளத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 5 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

தனியாருக்குச் சொந்தமான 9N-AMV என்ற எண் கொண்ட இந்த ஹெலிகாப்டர் ஒன்று இன்று (ஜூலை 11) காலை சொலுகுன்வு மாவட்டத்தின் சுர்கே பகுதியில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட 15 வது நிமிடத்திலேயே இது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், அதில் பயணம் செய்தோர் உயிரிழந்ததும் பின்னர் தெரியவந்தது. உயிரிழந்தவர்கள் இருவர் 90 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். 3 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த ஹெலிகாப்டர் மனாங் ஏர் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது. இவர்கள் எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட நேபாள நட்டின் மிக உயரமான மலை உச்சிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிக் காட்டும் சுற்றுலா சேவை செய்து வருகின்றனர். இந்நிலையில், மெக்சிகோ நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற இவர்களின் 9N-AMV எண் கொண்ட ஹெலிகாப்டர் காத்மாண்டு திரும்பிக் கொண்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக வேறு பாதையை தேர்ந்தெடுத்து வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காலை 10 மணியளவில் லம்ஜுரா பாஸ் வழியாகச் சென்ற அந்த ஹெலிகாப்டர் அதன் பின்னர் ரேடாரில் தென்படவில்லை. பின்னர் அதன் சிதைந்த பாகங்களை அந்தப் பகுதியின் கிராமவாசிகள் சிலர் கண்டறிந்து தகவல் கொடுத்துள்ளனர். விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த 6 பேரும் உயிரிழந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற சுற்றுலாக்கள் மே மாதத்தில் தான் மேற்கொள்ளப்படும் என்றும், அந்தப் பருவம் முடிந்தபின்னர் எவரெஸ்ட் சிகரம் நோக்கி இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது விதிமீறல் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யபடவில்லை. அரசாங்கம் இது தொடர்பாக விசாரணைக் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் விமான, ஹெலிகாப்டர் விபத்துகள் பட்டியல் பெரிது. காரணம் அங்கே சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு இடையே ஹெலிகாப்டர் அல்லது சிறிய ரக விமானங்கள் வழிப்பயணமே நடைபெறுகிறது. இந்தச் சூழலில் மேகமூட்டங்கள், மோசமான வானிலை காரணமாக விமான, ஹெலிகாப்டர் விபத்துகள் நடந்துவிடுகின்றன.