எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமலாக்கத் துறையை பாஜக ஏவி வருகிறது திமுக

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமலாக்கத் துறையை பாஜக ஏவி வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை சுமார் 7.30 மணி முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன் முடியின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சோதனை நடைபெறும் சைதாப்பேட்டை வீட்டுக்கு வருகை தந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “முதல்வர் தனது பிறந்த நாள் விழாவில், யார் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட, யார் வரக் கூடாது என்பது தான் முக்கியம் என்று பேசினார். அதன் பிறகு தொடர்ந்து மத்திய அரசு, ஆளுநர் மூலமாக சில நெருக்கடிகளையும், தற்போது அமலாக்கத் துறை மூலமாக நெருக்கடிகளையும் தந்து கொண்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்டபோது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெற்றது. தற்போது பெங்களூரு கூட்டத்தின் கவனத்தை திசை திருப்பவே பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமலாக்கத் துறையை பாஜக ஏவி வருகிறது.

எந்த வழக்கு என்று தெரிந்துகொள்ள, அவரின் வழக்கறிஞர் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது. ஆனால், எங்களை அனுமதிக்கவில்லை. சட்ட ஆலோசனை வழங்குவதற்குக் கூட உள்ளே அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்கில் நெருக்கடி அளிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கை வைத்து மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது” என்று அவர் கூறினார்.