எதிர்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி பெங்களூரு செல்கிறார்

எதிர்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி பெங்களூரு செல்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறது. இதை தொடர்ந்து எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பாட்னாவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன. தேசிய அளவில் பா.ஜ.க.விற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று அந்த கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 2-வது கூட்டம் பெங்களூருவில் வரும் 17, 18-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், எதிர்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி காலையில் பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.