ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம் போகலூர் வட்டாரத்தில் முத்துவயல் கிராமத்தில் வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், விவசாயிகள் தங்கள் வயலில் யூரியா, டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை இடுவதன் மூலம் பயிருக்கு தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மண்ணில் இருந்து கிடைக்கிறது. இந்த பேரூட்டசத்துக்களுடன் நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, மக்னீசியம் துத்தநாகம், தாமிரம், குளோரின் ஆகியவை மிகக் குறைந்த அளவு தேவைப்படும். இந்த நுண்ணூட்ட சத்துக்கள் தொழு உரத்தில் உள்ளன. குறைந்த அளவு தொழு உரத்தை ஊட்டமேற்றி பயன்படுத்தினால் நுண்ணூட்ட சத்துக்கள் பயிருக்கு எளிதில் கிடைக்கும் என்றார்.
இதையடுத்து வேளாண்மை துணை இயக்குனர் சேக்அப்துல்லா பேசுகையில், நன்கு மக்கிய மாட்டு சாண தொழு உரம் 300 கிலோவுடன் 50 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை சிறிது சிறிதாக கலந்து குவித்து வைக்க வேண்டும். குவியலின் மீது களிமண் அல்லது மாட்டு சாணம் கொண்டு காற்று புகாவண்ணம் நன்றாக பூசி மெழுக வேண்டும். 30 நாட்களுக்குள் தினமும் லேசான தண்ணீர் தெளிக்க வேண்டும். அதன்பின் கிளறி ஆற வைத்து ஏக்கருக்கு 300 கிலோ இடலாம். இதனால் வயல் மண் பொல பொலப்பாகி காற்றோட்டம் அதிகரிக்கிறது. பயிர் வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது. பயிருக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துகள் கிடைக்கிறது என்றார்.
இந்த செயல் விளக்கத்தின் போது முத்து வயல் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, வேளாண்மை உதவி இயக்குனர் நயினார்கோவில் கே.வி.பானு பிரகாஷ், துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல், உதவி வேளாண்மை அலுவலர் நவீன் ராஜா மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.