ஊசி மூலம் செலுத்தப்படாத உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் அறிமுகம்..!

ஊசி மூலம் செலுத்தப்படாத உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 219 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,74,269-ஆக குறைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் ‘ஜைடஸ் கேடில்லா’ நிறுவனத்தின் ஊசியில்லா கொரோனா தடுப்பூசியான ஜைகோவ்-டி மருந்து அடுத்த மாதம் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் மத்தியில் இருந்து தடுப்பூசி விநியோகம் ஆரம்பமாகும் என்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கிடைக்க தொடங்கும் என்றும் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார். முதலில் மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளும் பிறகு தயாரிப்பு இலக்கு அதிகரித்து மாதத்திற்கு 4 கோடி முதல் 5 கோடி வரை தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் 6வது தடுப்பூசியாக ‘ஜைடஸ் கேடில்லா’ என்ற இந்திய நிறுவனம் தயாரித்துள்ள, முதல் மரபணு (டிஎன்ஏ) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான ஜைகோவ் – டி’க்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது.

இது, இது 12 முதல் 18 வயதுடைய பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள முதல் தடுப்பு மருந்தாகும். மேலும், ஊசி மூலம் செலுத்தப்படாத உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.