உளுந்தூர்பேட்டையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் கடத்தல் நடைபெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிஎம்.ஆர்.மணிமொழியன் தலைமையில், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், அருட்செல்வன் மற்றும் காவலர்கள் ஆகியோர் கொண்ட குழு உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் சோதனை மேற்கொண்டு வந்தனர்,.
இந்நிலையில் நேற்று இரவு விருத்தாசலம் சாலையில் வந்து கொண்டிருந்த பொலிரோ பிக்கப் என்ற வாகனத்தை மறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது ஓட்டுநர் சரியான பதில் அளிக்காததால், காவல் நிலையம் அழைத்து சென்று வண்டியில் உள்ள பொருட்களை சோதனை செய்ததில் சுமார் 25க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ், பான் மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட அரசு தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் உளுந்தூர்பேட்டை, அன்னை தெரசா நகர் பகுதியில், உள்ள அண்ணாமலை நகரில் வசித்து வரும் ராமசாமி மகன் வெற்றிவேல்(42) என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்து, உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள சேந்தநாடு, குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதாகவும் தெரியவந்தது.
மேலும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா மங்கலம்பேட்டை பேரூராட்சியில் வசித்து வரும் அப்துல்ரஷித் மகன் இஸ்மாயில்(45) என்பவரிடமிருந்து மொத்தமாக வாங்கிவந்து விற்பனை செய்வதாகவும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து வாகன ஓட்டுனர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் கொங்கராயன் தெருவில் வசித்து வரும் ரங்கன் மகன் துரைசாமி(39) என்பதும் தெரியவந்த பின்னர், இவர்களிடமிருந்து வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வரும் உளுந்தூர்பேட்டை அருகே குமாரமங்கலத்தைச் சேர்ந்த முத்துக்குமார்(45) என்பவரையும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியை சேர்ந்த முருகன்(32) உள்ளிட்ட ஐந்து நபர்களையும் கைது செய்து, மேலும் அவர்களிடமிருந்து பொலிரோ பிக்கப் வாகனம் ஒன்றும் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.