உளுந்தூர்பேட்டை : நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி விருத்தாசலம் சாலையில் சாரைப்பாம்பு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் புகுந்து தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூ.கள்ளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவர் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி விருத்தாசலம் சாலையில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் இன்று காலை வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை கடையின் முன்பு நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மதியம் தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக வந்தவர் வாகனத்தில் பாம்பின் தலை தெரிவதை பார்த்து சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கூட்டம் கூடி அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் விமல் ராஜ், லூர்து சேவியர் ஆகிய இரு இளைஞர்கள் லாவகமாக இருசக்கர வாகனத்தில் இருந்த சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டெடுத்து ஏரிப்பகுதியில் சென்று விட்டனர். இதனால் இப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்பட்டது.