உளுந்தூர்பேட்டை அருகே சாலை அமைக்க கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து நில உரிமையாளர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த, காட்டுநெமிலி கிராமப் பகுதியின் வழியாக விருத்தாச்சலம் செல்லக்கூடிய புறவழிச் சாலையில் சாலையின் குறுக்கே முற்செடிகளை  வெட்டி போட்டு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை – கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள முக்கிய தொழில் நகரங்களை இணைக்கும் வகையில், இரண்டு  மற்றும் நான்கு வழி சாலைகள் அமைக்க தனியார் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, பல்வேறு நிலைகளாக சாலைகள் அமைக்கும் பணி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாச்சலம் வரை சுமார் 23 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணிக்காக, தனியார் மற்றும் அரசு நிலங்களை கையகப்படுத்தி, இரண்டு வழி  சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இந்த நிலையில், மங்களம் பேட்டை அருகே உள்ள காட்டுநெமிலி கிராம எல்லையில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட தனியார் வீட்டுமனைகளை  கையகப்படுத்தி சாலை அமைத்துள்ளனர், ஆனால் நில உரிமையாளர்களுக்கு இதுவரை இழப்பீடு பணம் வழங்காததாலும், மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை பணம் வழங்காததால் கோபம் அடைந்த நில உரிமையாளர்கள் இன்று சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ், காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்வாணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம்,  இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கலாம் என சமாதானப்படுத்திய, பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 83 = 85