கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் சித்திரைப்பெருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் முன்னிலையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு கூத்தாண்டவர் சித்தரைப் பெருவிழா வரும் 18-ம்தேதி சாவை வார்த்தல் நிகழ்ச்சியுடன் சித்திரைப்பெருவிழா உற்சவம் தொடங்கி வரும் மே மாதம் 05-ம்தேதி வரை விமரிசையாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூத்தாண்டவர் திருவிழா மகாபாரதபோர் 18 நாட்கள் நடைபெற்றது போல் கூவாகம் கிராமத்தில் (அரவான்) கூத்தாண்டவர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறவது வழக்கம், இவ்விழாவில் முக்கிய நிகழ்வுகளான மே 01-ம் தேதி அன்று மாலை கம்பம் நிறுத்துதல், 02-ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைள் பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளுதல், 03-ம் தேதி காலை திருத்தேர் வலம் வருதல், மாலையில் பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இவ்விழா காலங்களில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கில் பக்தர்கள், திருநங்கைகள் வருகை புரிந்து திருவிழாவில் கலந்து கொள்வார்கள். மேலும், இவ்விழாவில் பக்தர்கள்,திருநங்கைகள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்து வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், பக்தர்களுக்கு திருவிழா நடைபெறும் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதியும் ஏற்படுத்திடவும், கூடுதலான பக்தர்கள் வருகை புரிவதை முன்னிட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி காவல் பணியில் கூடுதல் காவலர்கள் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும், போதியளவில் மருத்துவ குழுக்களும், தடையின்றி மின்சார வசதியும் ஏற்படுத்திடவும், பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் திருவிழாவில் பாதுகாப்பாக கலந்து கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகள் பணிகளும் சிறப்புடன் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர்,நகை சரிபார்ப்பு அலுவலர் சிவலிங்கம், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் சிவாகரன், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பானர் மகேஷ், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ராஜி, உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், செல்வபோதகர், செயல் அலுவலர் மதனா, கூவாகம் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி முருகேசன், அரசு அலுவலர்கள், திருநங்கைகள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.