கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்கள் சார்பில் உலக மகளிர் தின விழா மிகச்சிறப்பாக புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலர் தாவூத் கனி, தாளாளர்கள் லியோ பெலிக்ஸ் லூயிஸ், அருள்சாமி, கனகராஜன், துணைத் தலைவர் சரவணன், நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி மக்கள் கவிஞர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், எழுத்தாளர் இராமலிங்கம் கலந்து கொண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பெண் மருத்துவர் திலகவதி மற்றும் மாணவிகளுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கி பேசியது.
மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால் பெண் உரிமைகள் என்பது சாதாரணமாக வந்தது அல்ல, அவ்வளவு போராட்டங்கள், இழப்புகள் எற்பட்டுள்ளது என்பதை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். வரதட்சணை கொடுப்பது பெரிய சிரமமாக இருந்தது. இதனால் பெண் சிசுக் கொலை என்பது தமிழகத்தில் அதிகமாக இருந்துள்ளது. உடன் கட்டை எறுதல் இல்லையே தவிர, கணவரை இழந்த பெண் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற சில கட்டுப்பாடுகள் இருந்தது. நடக்கிற சுப காரியத்தில் கூட விதவையான பெண் வரக்கூடாது என்று மனித சமூகம் மறுத்துள்ளது. விதவைப் பெண் எதிரே வந்தால் போகிற காரியம் நிறைவேறாது என்று கூட நம்பியது நம்தேசம். கணவர் இறந்தால் மனைவிக்கு மொட்டையடித்து காவித்துணி உடுத்தி ஒரு இடத்தில் தான் இருக்க வேண்டும் என்ற நிலைமை இருந்துள்ளது.
பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும்தான். இங்கிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குரிமை கிடையாது. அங்கே டெர்பி என்ற குதிரை ஒட்டப்பந்தயம் இருந்தன. அதில் எமிலி டேவிசன் என்பவர் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டுமென்று குரல் கொடுத்து, ஒடிவரக்கூடிய குதிரைகளுக்கு எதிரே நின்று காயப்பட்டு, துன்பப்பட்டு நான்காவது நாளில் இறந்தார், அதற்கு பிறகு தான் இங்கிலாந்து நாட்டில் வாக்குரிமை வழங்கப்பட்டது. தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், ஒழிக்கப்படக்கூடாது என்று சொன்னவர்களும் நம் நாட்டில் இருந்தார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
1875-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகள் தாது வருட பஞ்சம் என்பது தமிழ் நாட்டில் இருந்தது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. எறும்பு புற்றில் சேர்த்து வைத்திருக்கும் அரிசியை கூட தோண்டியெடுத்து, சாப்பிடுகிற அளவுக்குப் பஞ்சம். முகம் வாடி, உடல் மெலிந்து, நோய்வுற்று திரிந்தார்கள். அப்படிப்பட்ட காலத்தில், மதுரை வடக்கு ஆவண மூல வீதி என்று இன்றைக்கும் இருக்கு. அங்கே குஞ்சரம்மாள் என்ற தேவதாசி இருந்தார். நடனம் ஆடுவது அவளுடைய தொழில். வீட்டுக்கு வருபவர்களுக்கு முன்பு நின்று ஆடிக் கொண்டு, அவர்களை மகிழ்வித்து அந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் மக்கள் பசியில் வாடுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வீட்டு வாசலில் அவள் தான் கஞ்சித் தொட்டியை தொடங்கினாள். இந்த செய்தி பரவியவுடன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் அவள் வீட்டை நோக்கி வந்தார்கள். வர, வர மூன்று பெரிய கரி அடுப்புகள் எரிந்து கொண்டே இருக்கும். எல்லோரும் குஞ்சரம்மாள் என்பதை விட்டு, குஞ்சரத்தாய் என்று அழைக்கத் தொடங்கினர். அவள் முகத்தில் தாய்மை வந்துவிட்டது,
இதைப்பார்த்து வியந்த அங்குள்ள மாவட்ட ஆட்சியர் இதன் பிறகு தான் கஞ்சித் தொட்டியை திறந்தார். இவளுடைய மரணத்திற்கு சேர்ந்த கூட்டம் மதுரை கோயில் திருவிழாவிற்கு வந்த கூட்டம் அளவிற்கு இருந்தது என அந்த ஆட்சியர் எழுதினார் என்பது வரலாறு. ஆகவே பெண்களாகிய நீங்கள் வரலாற்றை படிக்க வேண்டும், முடிந்தளவு தானம் செய்ய வேண்டும் என்றார். முன்னதாக கல்லூரி இயக்குநர் குமுதா, முதல்வர்கள் சரவணன், திலகவதி, கவிதா, ரேவதி ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, மகா சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.