உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 2 பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்துள்ள ராமாநாதபுரம் கிராமத்தில், லட்சுமி – வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் விறகு வெட்டியவர்கள், அங்கு 2 பீரங்கி குண்டுகள் இருப்பதை கண்டு பென்னலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு வந்து சோதனையிட்டனர்.

பின்னர், வெண்குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு 2 பீரங்கி குண்டுகளையும் அவர்கள் சோதனையிட்டனர். இவை, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டுகள் என்றும், ஏற்கனவே கடந்த 1996-ல் ஒரு பீரங்கி குண்டு கண்டெடுக்கப்பட்டதாகவும், இது போன்று வேறு சில பீரங்கி குண்டுகள் இந்த பகுதியில் இருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2 பீரங்கி குண்டுகளை மீட்ட வருவாய்த் துறையினர், கும்மிடிப்பூண்டியில் உள்ள வெடிகுண்டுகள் செயலிழக்கும் இடத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த பகுதியில் வேறு பீரங்கி குண்டுகள் இருக்கலாம் என்பதால், தொடர்ந்து சோதனை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.