உலகத் தரத்தில் மெகா ஜவுளி நகரம் அமைக்கப்படும் சர்வதேச மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

தமிழக அரசின் ஜவுளித்துறை, மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பேசியதாவது:

ஒவ்வொரு துறையிலும் நமது அரசு பன்னாட்டளவிலான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதில் தொழில்துறை முன்னணியில் இருக்கிறது. உலகத்தரத்திலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். விளையாட்டுத் துறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம்.

பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த வரிசையில் துணிநூல் துறை சார்பில் முதன்முறையாக ஜவுளித்தொழில் குறித்தான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும்.

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறையானது மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஜவுளித்துறையை பொறுத்தவரை, நமது மாநிலம் அன்னிய முதலீட்டினை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியில் 3வது பெரிய இடத்தில் இருக்கிறது.

வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக ஜவுளித்தொழில் உள்ளது. ஜவுளித்தொழிலில் தமிழகம் எப்போதுமே முன்னணி வகிக்கக்கூடிய மாநிலம். இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழகம் மட்டுமே 12 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது. ஜவுளித் தொழிலில் புதிய தொழில்நுட்ப உத்திகளை கடைப்பிடித்து, உலகளவில் தேவைப்படும் பல்வேறு துணி வகைகளையும் தமிழகம் உற்பத்தி செய்கிறது.

தமிழகத்தில் உலகத் தரத்தில் மெகா ஜவுளி நகரம் உருவாக்கிட முயற்சிகள் எடுத்து வருகிறோம். மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைத்திடவும் திட்டமிட்டுள்ளோம். ரூ.10 கோடி செலவில், நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உட்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் நிறுவிடவும் நமது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் “ஏற்றுமதி மையங்கள்” அமைக்கக்கூடிய பணிகளையும்  செயல்படுத்தி வருகிறோம். அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் நுட்ப ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

43 + = 49