உதயநிதி ஸ்டாலின் செயற்கை நட்சத்திரம் – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

மேகேதாட்டு அணை கட்டி விட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும், பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை யானைப்பசிக்கு சோளப் பொரியாக உள்ளது என்றும் உதயநிதி ஸ்டாலின் செயற்கை நட்சத்திரம் தான் இயற்கை நட்சத்திரம் அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் ரோடு எஸ்எம்கே திருமண மண்டபத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு பார்வையற்றோருக்கு அரிசி  வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், கையாலாகாத நிர்வாகத் திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளது. அனைத்து திட்டங்களிலும் குளறுபடியின் மொத்த வடிவமாக உள்ளது. எந்த துறையும் முழுமையாக செயல்படவில்லை. 520 தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு அதை 100 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் பொறுப்பில் இருந்து கொண்டு ஸ்டாலின் பச்சைப்பொய் பேசி வருகிறார்.

ஒரு அரசு விழாவில் உதயநிதியை ஸ்டாராக இருப்பதால் துறையும் ஸ்டாராக வளர்ந்து இருக்கிறது என்று ஸ்டாலின் பாராட்டி உள்ளார். இங்கே விவசாயிகள் செத்து மடிகிறார்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, ஆசிரியர் போராட்டம் எதையும் நிவர்த்தி செய்யவில்லை, ஆனால் இன்றைக்கு முதல்வர் விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் இயற்கை நட்சத்திரம் இல்லை, செயற்கை நட்சத்திரம். தனது தாத்தா, தந்தை, குடும்ப செல்வாக்கால் செயற்கை நட்சத்திரமாக தான் உயர்ந்துள்ளார். மக்கள் செல்வாக்கால் ஜொலிக்கவில்லை. செயற்கை நட்சத்திரம் பிறரின் வெளிச்சத்தில் தான் சார்ந்து இருக்கும். சுயமாக வெளிச்சம் தர முடியாது என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.