
உதகையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்துக்காக விடுமுறை அளித்த பள்ளிக்கு, விளக்கம் கேட்டு கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பாகவத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ஒரு வாரம் தொடர் விடுமுறையை பள்ளி நிர்வாகம் அளித்துள்ளது. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக, பெற்றோர் சிலர் கல்வித் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதனடிப்படையில், விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாவட்ட பள்ளி கல்வித் துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதாவிடம் கேட்டபோது, “உதகையை அடுத்த தீட்டுக்கல் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை விடப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. அதன்பேரில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.