உடுமலை பஞ்சலிங்க அருவியில்வெள்ளப் பெருக்கில் உயிர் தப்பிய பக்தர்கள்

உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவியில் நேற்று இரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை மழை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை மீது பஞ்சலிங்க அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண்ணீர் கொட்டுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து, மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்கின்றனர்.

நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பதால் அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருவதால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. மழையின் வேகம் அதிகரித்ததன் காரணமாக, பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் தண்ணீரின் வரத்து அதிகரித்தது. இதனால் வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோயிலையும் சூழ்ந்தது. இதையடுத்து கோயிலில் இருந்த பக்தர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோயில் உண்டியல்கள் அனைத்தும் பிளாஸ்டிக் போர்வையால் பாதுகாப்பாக சுற்றி வைக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு இரவில் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பகலில் சாமி தரிசனம் மற்றும் குளிக்க வந்த ஏராளமான பக்தர்கள் உயிர்த்தப்பினர். இதனிடையே காலை வரையும் தொடர்ந்து வெள்ளம் அதிகரித்துள்ளதால், கோயிலுக்கு செல்லவும், அருவிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.